2022–23 ஆம் ஆண்டுக்கு ரூ. 26 ஆயிரத்து 353 கோடியில் இறுதி துணை மதிப்பீடுகள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்

Published Date: March 29, 2023

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

2022–23 ஆம் ஆண்டுக்கான ரூ. 26 ஆயிரத்து 353 கோடியில் இறுதி துணை மதிப்பீடுகளை சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

தமிழக சட்டசபையில் நேற்று 2022–23 ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை வெளியிட்டு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இறுதி துணை மதிப்பீடுகள்

இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ. 26 ஆயிரத்து 352 கோடியே 99 லட்சம் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில் ரூ. 19 ஆயிரத்து 776 கோடியே 50 லட்சம் வருவாய் கணக்கிலும், ரூ. 3 ஆயிரத்து 642 கோடியே 26 லட்சம் மூலதன கணக்கிலும், ரூ. 2 ஆயிரத்து 934 கோடியே 23 லட்சம் கடன் கணக்கிலும் அடங்கும்.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி 2022–23 ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ‘புதுப்பணிகள்’ மற்றும் ‘புதுதுணை பணிகள்’ குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதலை பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.

உணவு மானியத்திற்கு ரூ. 2,140 கோடி

துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதி ஒதுக்கமாக, கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் போக்குவரத்து செலவினங்களுக்காக உணவு மானியத்தில் ரூ. 2 ஆயிரத்து 140 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற மாநில போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வு கால பலன்களுக்காக ரூ. 1,032 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பால்வளத் துறையின் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்திற்கு வட்டியில்லா கடனாக ரூ. 150 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

நிலுவை செலவு

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் நிலுவை செலவினங்களுக்காக ரூ. 1,393 கோடியே 38 லட்சம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Media: DAILYTHANTHI